Wednesday, December 24, 2008

ஆன்மீகம் என்றால்...

சிலர் தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார்கள், ஆன்மீகத்தில் இருப்பது சிறப்பானது என்றும், அதனால் தாங்கள் மற்றவர்களைவிட புனிதமானவர்கள், உயர்ந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள். அதற்கு மாறாக வேறு சிலர் 'ஆன்மீகம் எனக்கு பிடிக்காது, நான் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன்' என்று, ஏதோ ஆன்மீகம் என்பது சந்தோஷத்தை பறிக்கக்கூடியது போலும், அதில் மகிழ்ச்சியே இல்லாமல் வரண்டு இருக்கும் என்பது போலும் சொல்கின்றனர். அப்படியானால், உண்மையில் ஆன்மீகம் என்பது என்ன. அது உண்மையில் பெருமைப்படக்கூடிய விஷயமா அல்லது வெறுக்கக்கூடிய அளவு அருவருப்பானதா?

முதலில் ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரிந்தால், பின் அது சிறப்புடையதா அல்லது அருவருப்பானதா என்று தெரிந்துவிடும்.

எது ஆன்மீகம், பிராத்தனை செய்வதா? ஒருவர் தினமும் பூஜையறையில் இரண்டு மணி நேரம் விடாது பூஜை செய்பவராக இருந்தால் அவரை சிறந்த ஆன்மீகவாதி என்று சிலர் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

அல்லது கோவிலுக்கோ, கிறிஸ்துவ தேவாலயங்களுக்கோ அல்லது மசூதிகளுக்கோ செல்வது ஆன்மீகமா? ஏனென்றால், பல கோயில்களுக்கும் பல புனிதயாத்திரைகளுக்கும் போய் வந்தவர்களை பெரிய ஆன்மீகவாதி என்று சொல்கிறார்கள்.

அல்லது ஆன்மீக புத்தகங்களைப் படிப்பது ஆன்மீகமா? பலர் இந்த மனிதர் பல ஆன்மீக புத்தகங்களை படித்துள்ளார், பண்டிதராக பட்டம் கூட பெற்று இருக்கிறார், சிறந்த மேதாவி, அதனால் அவர் ஒரு ஆன்மீகவாதி என்று சொல்வதை கேள்விபட்டு இருக்கிறோம்.

அல்லது சில பூஜைகளையோ அல்லது மத சம்பந்தமான சடங்கு சம்பிரதாயங்களையோ செய்வது ஆன்மீகமா, அல்லது மந்திரங்களை ஜபிப்பதோ அல்லது நோன்பு இருப்பதோ அல்லது விரதம் இருப்பதோ ஆன்மீகத்தின் அடையாளமா?

என் குழந்தை பருவத்தில், ஆன்மீக அடையாளங்களை உடலில் கொண்டுள்ளவர்கள், அதாவது விபூதியையோ சந்தனத்தையோ திருமண்ணையோ நெற்றியில் பூசிக்கொண்டவர்கள், முஸ்லீமாக இருந்தால் குள்ளா அணிந்தவர்கள், கிறிஸ்தவர்களில் சிலுவையை கழுத்துச் சங்கிலியில் போட்டுக்கொண்டவர்கள் எல்லாம் நல்ல மனம் கொண்ட ஆன்மீகவாதிகள் என்று நினைத்து இருக்கிறேன். என்னைப்போல் இன்றும் பலர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால், ஆன்மீகம் என்பதை இந்த மாதிரி அங்க அடையாளங்களோ அல்லது சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதோ நிர்ணயிப்பது அல்ல என்பது நமக்கு தெரியும்.

ஆன்மீகம் என்ற வார்த்தை கடவுளையோ அல்லது தியாகங்களையோ அல்லது சந்தோஷ மறுப்பையோ குறிப்பது அல்ல. அந்த வார்த்தையில் ஆன்மா சம்பந்தானது என்ற அர்த்தம் தான் இருக்கிறது. இது தமிழில் மட்டுமல்ல, பெரும்பாலான மொழிகளில் ஆன்மீகம் என்பதற்கான சொல், ஆன்மாவை குறிப்பதாகத்தான் உள்ளது.

நான் படித்த ஆன்மீக புத்தகங்களில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், ஆன்மீகம் என்பது உண்மையை அறிந்து கொள்வது மட்டுமே. அதில் இறுதியாக இருக்கும் ஒரே ஒரு உண்மையான ஆன்மாவை புரிந்து கொள்வதால் தான் அது ஆன்மீகம் எனப்படுகிறது. அந்த உண்மை தெரிந்த பின்பு எப்படி ஒருவர் நடந்து கொள்கிறார் என்பது அவர் அவர் விருப்பம். சிலர் காட்டிலோ மலைகளிலோ போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். சிலர் நம்மைப்போல் அன்றாட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைப்பருவத்தில் இருந்து நாளுக்கு நாள் வளரும் பொழுது தினம் பல பல உண்மைகளை தெரிந்து புரிந்து கொண்டுதான் நாம் வளர்ந்து வருகிறோம். அதே போல், நமது வாழ்க்கை சம்பந்தமான உண்மைகளையும் ஆன்மீகத்தின் மூலம் தெரிந்து கொள்வது என்பது ஒரு தொடர்ச்சி.

அன்றாட வாழ்கையில் கூட ‘உண்மைகள்’ தான் நம்மை எந்த ஒரு கெடுதலும் நெருங்கவிடாமல் பாதுகாத்து வருகின்றன. அதனால், நமக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கிறது. உதாரணமாக பாம்பு கடித்தால் ஆபத்தானது என்ற உண்மை தெரிந்தால், நாம் பாம்பிடம் இருந்து ஒதுங்கி இருக்க முயற்சிப்போம், அந்த உண்மை நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது. அதே மாதிரி 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அவர்கள் மார்பகங்களையும் எலும்பின் உறுதித்தன்மையையும் பரிசோதித்து தெரிந்து கொள்வது அவர்களை மார்பகப்புற்று நோயிலிருந்தும் அடிக்கடி எலும்பு முறிவிலிருந்தும் காப்பாற்றும் என்பது தெரிவதால், நாம் அதற்குரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து தற்காப்பாக இருக்க முயற்சிக்கிறோம். ஆக எந்த உண்மையாக இருந்தாலும் அது நமக்கு நன்மையையே செய்யும். அதே போல் ஆன்மீகம் மூலமாக வாழ்க்கையை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகள் ஒரு கவசம் போல் நாம் எந்த ஒரு மனசஞ்சலத்துக்கும் மனக்கஷ்டத்துக்கும் உள்ளாகி பாதிக்கபட்டுவிடாமல் நம்மை காப்பாற்றுகிறது.

நாம் செய்தித்தாள்களை தினமும் படிப்பதுகூட புதுப்புது உண்மைகளை தெரிந்து கொள்வதற்காகத்தான். ஒரு ஊருக்கு போகலாம் என்று இருக்கிறோம், அந்த ஊரில் வெள்ளம் வந்து ரோடுகள் எல்லாம் துண்டிக்கப்பட்டது என்ற உண்மை செய்தித்தாள்கள் மூலம் தெரிந்தால் நாம் அந்த ஊருக்கு போவதை தவிர்த்துவிடுவோம். இந்த உண்மை தெரியாமல் நாம் போனோம் என்றால் துண்டிக்கப்பட்ட ஊருக்கு போக முடியாமல் அவதிப்படுவோம். எப்படி இந்த சின்ன உண்மை நம்மை சிக்கலில் இருந்து காக்கிறதோ, அதே மாதிரி ஆன்மீகம் கற்றுக்கொடுக்கும் பல பெரிய உண்மைகள் நாம் அன்றாட வாழ்க்கையில் தடுக்கிவிழாமல், சறுக்கிவிழாமல், மன உறுதியோடு வாழ்க்கையை எதிர் கொள்ள உதவுகிறது.

தீப்பொறி போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும் சந்தோஷத்திற்குப்பதில், நமக்கு ஏற்படும் எல்லா கவலைகளையும், மனவருத்தங்களையும் போக்கி குறைவற்ற, தடைபடாத பேரானந்தத்தை நமக்கு உறுதி செய்வதே ஆன்மீக உண்மைகளின் நோக்கம்.

ஆன்மீகம் நமக்கு கிடைக்கக்கூடிய ஆனந்தத்தை குறைப்பதோ, அழிப்பதோ அல்ல, அதற்கு மாறாக, நம்மை நித்திய ஆனந்தத்தில் திளைக்கச்செய்வதே ஆன்மீகம்.

சரி அப்படியானால், பிராத்தனை செய்வது, கோவிலுக்கு போவது, ஆன்மீக புத்தகங்கள் படிப்பது, புனித யாத்திரை போவது, பூஜை செய்வது, விரதம் இருப்பது எல்லாம் ஆன்மீகம் இல்லியா? என்று கேட்டால், இவைகள் எல்லாம் ஒருவகையில் நமக்கு உண்மையை தேடுவதில் ஆர்வத்தையும், அதே நேரம் சிறுக சிறுக ஏதோ ஒரு உண்மையை தெரிவிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டவை. ஆனால், கால மாற்றத்தில் அவற்றின் உண்மையான நோக்கம் மறைந்து அவைகளை மட்டும் செய்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்கு மேற்கொண்டு சென்று உண்மைகளை கண்டறிவது தான் வாழ்க்கைக்கு தேவையானது என்று உணர்ந்து, அதன் படி உண்மைகளை தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால், ஆன்மீகம் என்பது உண்மையை தெரிந்து கொள்வது தான் என்ற கருத்து நாளடைவில் மறைந்துவிட்டது. இந்த ஆன்மீகத்தின் அர்த்தம் மறைந்து நாம் வெளிப்புறமான சடங்குளிலும், சம்பிரதாயங்களிலும், அங்க அடையாளங்களிலும் மட்டும் கவனத்தை செலுத்தியதால், நமக்கு எந்த பலனும் கிடைக்காமல் போய்விட்டது. அதனால், ஆன்மீகத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு சிலர் வந்துவிட்டனர். அதே போல், உண்மை தெரிந்த பெரியவர்களில் சிலர் உலக வாழ்க்கையில் இருக்கிறார்கள், சிலர் எல்லா உலக சுகங்களையும் துறந்து காட்டிலோ மலைகளிலோ போய் உட்கார்ந்துவிடுகிறார்கள், அப்படிப்பட்டவர்களை மட்டும் பார்த்து பலர் ஆன்மீகத்தில் இறங்கினால் இப்படித்தான் நாமும் எல்லா சுகங்களையும் துறக்க வேண்டியிருக்குமோ என்று பயப்படுகிறார்கள். அதற்கு மாறாக, ஆன்மீகத்தில் இருப்பவர்களிடம் காணும் சில சக்திகளைப்பார்த்து ஆன்மீகம் என்பது சிறந்தது என்று சிலர் சொல்கிறார்கள்.

ஆனால் அது போற்றப்பட வேண்டியதோ அல்லது வெறுத்து பயப்பட வேண்டியதோ அல்ல. ஆன்மீக உண்மைகள் மனக்கவலைகளிலிருந்தும், மன சஞ்சலங்களில் இருந்தும் நம்மை விடுவித்து நிலையான பேரானந்தத்தை மட்டுமே தரக்கூடியது. ஆன்மீகத்தின் உண்மைகள் எவ்வளவு நமக்கு தெரிகிறதோ அவ்வளவு நமக்கு நிம்மதியும் ஆனந்தமும் கிடைக்கும். எல்லா உண்மைகளும் தெரிந்த இறுதி நிலையில் துன்பத்துக்கு இடமே இல்லாத நித்தியானந்தம் மட்டுமே அங்கு இருக்கும்.

No comments:

Post a Comment