Tuesday, June 23, 2009

உறவுகள்

பெரும்பாலும் நமக்கு மனக்கஷ்டமும், வருத்தமும் வருவதற்கு உறவுகளுடன் ஏற்படும் மனஸ்தாபமும் ஒரு முக்கிய காரணமாகும். உறவு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கலாம். இங்கே நாம் எல்லாவிதமான உறவுகளையும் எடுத்துக்கொள்வோம், பெற்றோர், சகோதரர்கள், கணவன்-மனைவி, மற்ற சொந்தங்கள், நண்பர்கள், வேலை மற்றும் வியாபார வகையில் வரும் தொடர்புகள் (உதாரணமாக முதலாளி, உயர் அதிகாரி, பங்குதாரர்) காதலன், காதலி போன்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வோம்.

அந்த மாதிரியான மனஸ்தாபங்கள் ஏன் உண்டாகிறது என்றால், நாம் நமது உறவுகள் எல்லாம் நம்மீது குறைவற்றை அன்பையும் ஆதரவையும் செலுத்துகிறார்கள் அல்லது செலுத்துவார்கள் என்று நாம் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுவதால் தான் உண்டாகிறது.

ஆனால், இங்கு ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால், உலகில் எந்த உறவுமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை பொழிவதில்லை. உறவுகள் என்பது ஒரு பண்டம் மாற்றம் போன்றது தான். நாம் எவ்வளவு அன்பை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கோ அல்லது அதற்கு குறைவாகவோ தான் மற்றவர்கள் கொடுப்பார்கள். நாம் பத்து ரூபாயை கொடுத்துவிட்டு அதற்கு குறையான விலையுள்ள பொருளை கடைக்காரர் கொடுக்கும் பொழுது வாக்குவாதம், சண்டை என்று சச்சரவில் முடியும், அந்த சச்சரவு தீராத பொழுது பொருளே வேண்டாம் என்று எறிந்துவிட்டு வந்துவிடுவோம். அப்படித்தான் உறவுகளும், அவர்கள் எதிர்பார்க்கும் அன்பையும் உதவியையும் நாம் செய்யாத பொழுது அதன் தாக்கத்தை எதிர்மறை செய்கைகளாகவும் சில நேரங்களில் வாக்குவாதம் சண்டைமூலமாகவும், சில நேரங்களில் உங்களுடைய உறவே வேண்டாம் என்றும் நடந்து கொள்கிறார்கள்.

இப்பொழுது நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது, என்னவென்றால், நான் ஒருத்தருக்கு அளவுகடந்த அன்பை கொடுத்திருக்கிறேன், ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் என்னை தூற்றி இருக்கிறார்கள் என்று. அதாவது இந்த பண்டம் மாற்று வியாபாரத்தில், திருப்தி என்பது நாம் அடுத்தவருக்கு அவர்களுக்கு வேண்டியதை கொடுக்கிறோமா என்பதையும், அதே நேரம் நாம் நமக்கு வேண்டியதை பெறுகிறோமா என்பதையும் பொறுத்து இருக்கிறது. உதாரணமாக நாம் பதினைந்து ரூபாய் கொடுத்து தாகத்துக்கு தண்ணீர் கேட்கும் பொழுது, தண்ணீருக்குப்பதில் இந்தா அதைவிட விலையுயர்ந்த சாக்லேட் என்று வியாபாரி கொடுத்தால், நமக்கு அந்த நேரத்தில் ஆகா நமக்கு விலை உயர்ந்த பொருள் கிடைக்கிறதே என்று ஆனந்தம் ஏற்படாமல் எரிச்சல் தான் வரும். இன்னும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நிறம் மாறாத பூக்கள் என்றொரு படம், அதில் வரும் ஒரு நாயகனுக்கு தூண்டில் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்று ஆசை வரும். அப்பொழுது அங்கு மீன் பிடிக்கும் சிறுவர்களிடம் அவர் தூண்டில் கேட்பார். அவர்கள் எங்களுக்கு ஐம்பது பைசா குடுங்கள் என்பார்கள். அந்த நாயகனோ பெரிய பணக்காரர், அதனால், நூறு ரூபாய் நோட்டை குடுப்பார். அதற்கு அந்த சிறுவர்கள், எங்களுக்கு இது வேண்டாம், எங்களுக்கு ஐம்பது பைசா தான் வேண்டும் என்பார்கள், அதற்காக அந்த பணக்கார நாயகன் அருகில் யாரிடமாவது அந்த நூறு ரூபாயை கொடுத்து அதற்கு பதில் ஐம்பது பைசா வாங்கமுடியுமா என்று பார்ப்பார். ஆக, இங்கே அவர் அதிகமாக கொடுத்தும் அது அந்த சிறுவர்களுக்கு சந்தோஷத்தை தரவில்லை, அதற்கு மாறாக இருநூறில் ஒரு பங்கான ஐம்பது பைசா தான் அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அது மாதிரி, நாம் அதிகமாக ஒருவருக்கு செய்தாலும் அது உண்மையில் அவர்களுக்கு அந்தளவுக்கு சந்தோஷம் தருகிறதா என்று பார்க்க வேண்டும். நாம் செய்வது அப்படி அவர்களுக்கு வேண்டாததாக இருக்கும் பட்சத்தில், நாம் எவ்வளவு அதிகமாக கொடுத்தாலும், அதனால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை.

அடுத்ததாக, சிலர் சொல்லலாம், பெற்றோர்கள் அன்பை இதில் சேர்க்க முடியாது என்று. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்று செய்யும் பொழுது அவர்களுக்கு அதில் தணிப்பட்ட ஒரு சந்தோஷம் இருக்கிறது. அந்த சந்தோஷத்துக்காகத்தான் செய்கிறார்கள். அதே போல் தான் சில நண்பர்களும் அவர்களுக்கு வேண்டிய நண்பர்களுக்கு அவர்களாக முன்வந்து உதவுவதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. ஆக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியோ அல்லது அன்போ செய்யக்கூடிய உறவு என்பது இல்லை.

இதை நாம் புரிந்து கொண்டால், மற்றவர்களிடத்தில் கலங்கமில்லாத, நிறைவான அன்பை எதிர்பார்க்க மாட்டோம். அப்படி எதிர்பார்க்காத பொழுது, நமக்கு எந்தவித ஏமாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏமாற்றம் இல்லாத பொழுது, எந்த மனவருத்தத்துக்கும் சாத்தியமில்லை.

3 comments:

  1. I really appreciate the above statements and its the relationship in this world is the root cause for all the problems.
    If we realize that in early stages of life, one can lead a very peaceful life.

    -Sathya.

    ReplyDelete
  2. Thanks Sathya for visiting the blog. Yes, you are right. This is what the scriptures call the bondage. Any bondage is the relationship. That relationship can be with persons or with objects. But, any relationship or bondage will bring sorrows only to us.

    ReplyDelete
  3. I agree with you Solai. for any relationship with our knowledge or without our knowledge we are paying the price . Once price/barter comes then it is purely a trade.

    Soundar

    ReplyDelete