Tuesday, June 30, 2009

சத்தியாக்ரகம்

சமீபத்தில், ஒரு நண்பர் கணவரோடு எப்படி குடும்பம் நடத்துவது என்று ஒரு blog ல் வந்திருந்த குறிப்புகளை அனுப்பி இருந்தார். அதில் மூஞ்சியை தூக்கி வைத்திருப்பதை பற்றியும் வந்திருந்தது. அதை படிக்கும் பொழுது வேடிக்கையாக இருந்தது.

நான் உறவுகள் என்ற பதிவில் எழுதியிருந்த பிரகாரம், நாம் எதிர்பார்த்த அளவு நமது உறவினர் நமக்கு செய்யவில்லை என்றால், நாம் நமது அதிருப்தியை, வருத்தத்தை, எதிர்ப்பை பல வழிகளில் காண்பிக்கிறோம். அவற்றில் சில: நேரடியாக சண்டை போடுவது, மறைமுகமாக குத்திக்காண்பிப்பது, பாத்திரங்களை, கதவுகளை சத்தம் ஏற்படும் படி கையாள்வது, அந்த உறவினருக்கு பிடிக்காததை வேண்டும் என்றே செய்வது, அடுத்தவர்களிடம் அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுவது, சாப்பிடாமல் இருப்பது, நமக்கு பிடித்தமானதை செய்யாமல் இருப்பது இவை எல்லாவற்றிற்கும் மேலாக பேசாமல் இருப்பது. இந்த பேசாமல் இருப்பதைத்தான் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வது என்று சொல்கிறோம்.

இந்தமாதிரியான ஆயுதத்தை வைத்துத்தான் நமது பெரியவர் மோகன்தாஸ் காந்தி நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார். அதாவது வன்மையைவிட, மனிதருக்குள் இருக்கும் மென்மையை காயப்படுத்துவது தான் சத்தியாக்கிரகம். கத்தியின்றி, ரெத்தமின்றி அஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்றோம் என்றாலும், இதுவும் ஒருவவையில் ஹிம்சை தான்.

மற்றவர்களை நம் வழிக்கு கொண்டுவருவதற்கு நாம் ஏதோ ஒரு வகையில் அடுத்தவரை பாதிப்புக்கு உள்ளாக்கினால் தான் அதை சாதிக்க முடியும். இல்லாவிட்டால், அந்த நபர் நான் அப்படித்தான் செய்வேன், நீ யார் கேட்பதற்கு என்ற ரீதியில் தான் நடந்து கொள்வார். குழந்தை அழுது அடம்பிடிப்பது கூட அந்த வகைதான். குழந்தை அழுது அடம்பிடிக்கும் பொழுது நமது மனம் இளகிவிடுகிறது, எவ்வளவு நேரம் தான் அழவிடுவது. அதுக்கு அது கேட்பதை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று நாம் முடிவுக்கு வருகிறோம். அதாவது அந்த குழந்தை அழுவது நமக்கு வலிக்கிறது. ஆக, எப்படியும் அடுத்தவர்களை காயப்படுத்தாமல் நாம் ஜெயிக்க முடியாது.

உறவுகளுக்கு இடையில் நாம் மாறி மாறி ஒவ்வொருத்தரையும் நமது வழிக்கு கொண்டுவர அவர்களை வளைப்பதற்கு நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். வயதானால் கூட நமது குழந்தைகளோ அல்லது பேரக்குழந்தைகளோ நாம் எதிர்பார்ப்பதை செய்யவில்லை என்றால், அவர்களுக்கும் நமது எதிர்ப்பை தெரிவிக்க வயது வித்தியாசம் இல்லாமல், இந்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொள்கிறோம். இது வன்முறையான ஆயுதமாக இல்லாததால், எந்த வயதிலும் இது தப்பாக யாருக்கும் தெரிவதில்லை. அது மட்டுமில்லாமல், இந்த மாதிரியான சத்தியாக்கிரக ஆயுதத்தில், நம்மை நாமே காயப்படுத்திக்கொள்கிறோம். ஆகவே, இது தப்பாக தெரியாமல் இருப்பது மட்டுமல்ல, இது எல்லோருக்கும் நல்லதாகவும் தெரிகிறது, ஏனென்றால் “நான் என்ன உங்களையா காயப்படுத்துகிறேன், என்னை நானே வருத்திக்கொள்கிறேன்.” என்று நாம் சொல்வதால்.

இப்படி வன்முறையான ஆயுதமோ அல்லது மென்முறையான சத்தியாக்கிரகம் போன்ற ஆயுதமானாலும் சரி அதை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. இருந்தாலும் அதை யாரும் கேட்கப்போவது இல்லை. ஆகவே, அப்படி மென்மையான ஆயுதங்களை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் பொழுது இரண்டு தரப்புக்கும் அதிகப்படியான இழப்புகள் ஏற்படாமல் எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.

அப்படியாக சத்தியாக்கிரக ஆயுதத்தை பிரயோகிக்க விரும்புவர்கள், எந்த ஆயுதத்தை எப்பொழுது யாரிடம் பிரயோகிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிந்து உபயோகிக்க வேண்டும். சகட்டு மேனிக்கு எல்லோரும் எப்பொழுதும் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொள்வது என்ற ஆயுதத்தை பயன்படுத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் என்ன ஆகிறது, ஒரு புறம், நமது ஆயுதத்துக்கு மதிப்பில்லையே என்ற ஆத்திரமும், அந்த உறவினரை வளைக்க முடியவில்லையே என்ற ஆத்திரமும், சேர்ந்து நமக்குத்தான் இன்னும் கோபம் அதிகம் வரச்செய்யும். இன்னொருபுறம், அந்த உறவினருக்கு நம்மைப்பற்றி ஒரு கேவலாமான எண்ணம் வரும், ஆமாம், இவர் எதற்கு எடுத்தாலும் சும்மா சும்மா மூஞ்சியை தூக்கிவைத்துக்கொள்வார் அல்லது எப்பொழுதுமே அழுதுகொண்டிருப்பார் என்று.

அதே நேரத்தில் இது மென்மையை தாக்குவது என்பதால், எந்த மென்மையான பகுதி ஒருவருக்கு பாதிப்பை உண்டு பண்ணும் என்பதை தேர்ந்து எடுத்து அதற்கு எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்பதை யோசித்து பயன்படுத்தவேண்டும். கர்ணனை தோற்கடிக்க அவனது கொடை கொடுத்தல் என்ற மென்மையை பயன் படுத்தி, அர்ச்சுனனின் தந்தை இந்திரன், தாய் குந்தி மற்றும் கண்ணன் எல்லோரும் வீழ்த்தினார்கள். அதே மாதிரி மாதம் இரண்டு மூன்று முறை உண்ணாமல் இருக்கும் ஒருவரிடம் உண்ணாமல் இருந்து காரியம் சாதிக்க முடியாது. நானும் தான் உண்ணாமல் பல நாள் இருக்கிறேன், இதில் என்ன பிரச்சனை என்று அந்த ஆயுதத்துக்கு மதிப்பில்லாமல் செய்துவிடுவார்கள்.

எல்லா ஆயுதத்தையும் எல்லோரும் கையால முடியாது. அப்படி கையாலும் பொழுது அதில் ஒரு நேர்த்தி வேண்டும். அப்படியான நேர்த்தி இல்லாததால் பல நேரங்களில் அது உதவுவதில்லை. பல கோடி பெருமானமுள்ள ஆயுதம் எதிரி இலக்கை சரியாக அடிக்காமல் பள்ளிக்கூடத்தில் விழுந்தால் எப்படி நமக்கும் நஷ்டமாகி, எதிரி பக்கமும் தேவையில்லாத நாசத்தை உண்டுபண்ணுமோ அதுபோல், மென் ஆயுதத்தையும் சரியாக கையாளவில்லை என்றால் இரு பக்கமும் தேவையில்லாத நஷ்டங்கள் தான் மிஞ்சும். உதாரணமாக, இன்று உண்ணாவிரதம் என்பது கேளிக்கூத்தாகி நடத்துபவர்களுக்கும் நஷ்டம், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் என்றாகிவிட்டது.

பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் இருந்தால் யாரும் யாரையும் வளைக்க வேண்டியதில்லை. நாமும் சுதந்திரமாக வாழ்ந்து பிறரையும் சுதந்திரமாக வாழ விடுவதே இந்த குறுகிய கால வாழ்க்கைக்கு நல்லது. ஆகவே, வன்மை, மென்மை இரண்டு ஆயுதங்களையும் எடுக்காமல் வாழ பழகுவோம்.

Saturday, June 27, 2009

மதிப்பு - 1

நாம் ஒவ்வொருவரும் நமது அடிப்படைத்தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் கிடைத்தவுடன், அடுத்து பெரிதாக கருதுவது அடுத்தவர்கள் நமக்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையும் தான். மதிப்புக்கான அளவுகோல்களை நமது சமுதாயம் காலங்காலமாக நமக்கு வகுத்துக்கொடுத்துள்ளது. இன்றைய காலத்தில், ஒருவருடைய மதிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வெளிவிஷயங்களினால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவருடைய கல்வி, அவர் கல்விகற்ற நிறுவனங்கள், அவர் பெற்ற மதிப்பெண்கள், மெடல்கள், அவர் வேலை பார்க்கும் மற்றும் பார்த்த நிறுவனங்கள், அதில் அவரது வேலை, அவர் வாங்கும் சம்பளம், அவர் வைத்திருக்கும் வீடு மற்றும் இதர சொத்துக்கள், வைத்திருக்கும் வாகனத்தின் மாடல், அவருடைய மனைவியின் கல்வி, மற்றும் வேலை, அவர் அணிந்திருக்கும் நகைகள், குழந்தைகளின் கல்வி, அவர்கள் படிக்கும் நிறுவனங்கள், இவர்கள் எல்லோரும் அணிந்திருக்கும் உடைகள், செருப்புகள், கைக்கெடியாரங்கள், மொபைல், வீட்டில் இருக்கும் உபகரணங்களின் பிராண்ட், இன்னும் அதிகமாக போனால், வீட்டு வேலை ஆட்களின் எண்ணிக்கை, வாகனங்களின் எண்ணிக்கை என்று இந்த வெளிவிஷயங்கள் நீண்டு கொண்டே போகும்.

இதற்கு மாறாக, நாம் அன்றாட வாழ்வில், மேலே கூறியவை எல்லாம் வைத்திருக்கும் பெரும்பாலானோர், ஒன்றுமே இல்லாமல் இருக்கும் சன்னியாசிகளை வணங்குவதையும் அவர்கள் கால் பணிந்துகிடப்பதையும் பார்த்து இருக்கிறோம்.

ஆக இந்த முரண்பாட்டில் இருந்து என்ன தெரிகிறது என்றால், உண்மையான மதிப்பு, ஒன்றுமே இல்லாத அந்த சன்னியாசிகளிடம் இருக்கிறது. ஆனால், அந்த மாதிரியான உண்மையான மதிப்பு இல்லாதவர்கள், மேலே கூறிய வெளி அலங்காரத்தினால் அது இருப்பது மாதிரி காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஆக உண்மையான மதிப்பு என்பது நமது உள்ளே உள்ளத்தில் இருக்கிறது. அந்த மதிப்பு தெரியாமல், நாம் இல்லாத வெளி விஷயங்களில் தேடி அல்லது வெளி விஷயங்களை சேர்த்துக்கொண்டு அந்த மதிப்பை அடைய விரும்புகிறோம்.

உள் மதிப்பைப்பற்றி யோசிக்கவும் அதற்கு மெனக்கடவும் நேரம் ஒதுக்காமல், வெளி மதிப்புக்குத்தான் நாம் நமது நேரத்தை செலவு செய்கிறோம். இறுதியில் எத்தனை தான் வெளிவிஷயங்கள் இருந்தாலும், உள் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும் பொழுது, நாம் எதற்காக இத்தனை பாடுபட்டோமோ மெனக்கெட்டோமோ அந்த மதிப்பையும் மரியாதையையும் பெறமுடியாமல் மீண்டும் மீண்டும் வெளி விஷயங்களை சேர்க்க முயன்று கொண்டே இருக்கிறோம். போக வேண்டிய ஊருக்கு எதிர்புறமாக பயணித்து, பயணத்தின் முடிவில் போக வேண்டிய ஊருக்கு வெகு தொலைவில் திரும்பி வரவே முடியாத தூரத்தில் நிற்கிறோம்.

அந்த உள் மதிப்புகள் தான் என்ன?

நமது உள்ளத்தே உள்ள மதிப்புகளைப்பற்றி எத்தனையோவிதமாக எத்தனையோ ஆன்மீக நூல்கள் கூறியிருக்கின்றன. ஆகவே இங்கே அவ்வளவையும் விவரித்துக்கூற வேண்டியதில்லை. இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது, வெளி விஷயங்களில் மதிப்பு இல்லை, அப்படிப்பட்ட மதிப்புகள் போலியானவை நிரந்தரமற்றவை; அவைகள், நமக்கு மதிப்பை தேடித்தராது. அதற்காக நேரத்தையும் நமது மனதையும் செலவிடுவதைவிட சும்மா ஒன்றும் செய்யாமல் இருந்தால் கூட நமது மதிப்பு இப்பொழுது இருப்பதைவிட அதிகமாகும் என்பதைத்தான்.

இதனை ஒரு சிறு கதையின் மூலம் இன்னும் நன்றாக புரிந்து கொள்வோம்.

ஒருநாள் ஒரு நல்ல பெண்மணி, ஒரு மலைமேல் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு விலைமதிப்பற்ற ரத்தினத்தை ஒரு ஓடையின் அருகில் கண்டு எடுத்தார். மறுநாள் அந்த பெண்மணி பசியோடு மிகுந்த களைப்பில் இருந்த ஒரு வழிப்போக்கரை சந்திக்க நேர்ந்தது. அவருக்கு உணவு தருவதற்காக அந்த பெண்மணி தனது கைப்பையை திறந்த பொழுது அந்த வழிப்போக்கர் அந்த பைக்குள் இருந்த ரத்தினக்கல்லை பார்த்துவிட்டு அந்த பெண்மணியிடம் அந்த கல்லை எனக்கு தரமுடியுமா என்று கேட்டார். அந்த பெண்மணியும் மறு பேச்சு பேசாமல் எதைப்பற்றியும் யோசிக்காமல், எந்த தயக்கமும் இல்லாமல் அந்த கல்லை அவரிடம் உடனே கொடுத்துவிட்டார். தனக்கு பெரிய அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டது என்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் உட்சாகத்துடனும் அந்த வழிப்போக்கர் விடைபெற்று சென்றுவிட்டார். அவருடைய வாழ்நாளின் எல்லா தேவைகளையும் அந்த கல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர் தீர்த்துக்கொள்ளமுடியும் என்று அவருக்கு நன்றாக புரிந்திருந்ததே அவருடைய சந்தோஷத்துக்கு காரணம். ஆனால் சில நாட்கள் சென்ற பின்பு, அந்த பெண்மணியை தேடி கண்டுபிடித்து அந்த கல்லை திரும்ப கொடுத்தார்.

அந்த பெண்மணி திகைத்து “ஏன் இதை திருப்பிக்கொடுக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு.

“அம்மணி, இதை வாங்கும் பொழுது நன்றாக சந்தோஷத்தோடு தான் வாங்கிச்சென்றேன். ஆனால், பிற்பாடு யோசித்துப்பார்த்து தான் இதை திருப்பிக்கொடுக்கிறேன். எனக்கு நன்றாக தெரியும் இது விலைமதிக்க முடியாதது என்றும் இது எனக்கு எல்லா செல்வங்களையும் பெற்றுத்தரும் என்றும். ஆனால், இதை நீங்கள் வைத்துக்கொண்டு இதைவிட அதிக மதிப்புள்ள ஒன்றை எனக்கு தரவேண்டும். உங்களுக்கு உள்ளே உள்ள எது உங்களை இந்த விலைமதிப்பற்ற கல்லை எந்த யோசனையும் இல்லாமல் கொடுக்க வைத்ததோ அந்த நல்ல உள்ளத்தை எனக்கு தரவேண்டும்.” என்றார்.

Tuesday, June 23, 2009

உறவுகள்

பெரும்பாலும் நமக்கு மனக்கஷ்டமும், வருத்தமும் வருவதற்கு உறவுகளுடன் ஏற்படும் மனஸ்தாபமும் ஒரு முக்கிய காரணமாகும். உறவு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கலாம். இங்கே நாம் எல்லாவிதமான உறவுகளையும் எடுத்துக்கொள்வோம், பெற்றோர், சகோதரர்கள், கணவன்-மனைவி, மற்ற சொந்தங்கள், நண்பர்கள், வேலை மற்றும் வியாபார வகையில் வரும் தொடர்புகள் (உதாரணமாக முதலாளி, உயர் அதிகாரி, பங்குதாரர்) காதலன், காதலி போன்ற எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வோம்.

அந்த மாதிரியான மனஸ்தாபங்கள் ஏன் உண்டாகிறது என்றால், நாம் நமது உறவுகள் எல்லாம் நம்மீது குறைவற்றை அன்பையும் ஆதரவையும் செலுத்துகிறார்கள் அல்லது செலுத்துவார்கள் என்று நாம் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படுவதால் தான் உண்டாகிறது.

ஆனால், இங்கு ஒன்றை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். என்னவென்றால், உலகில் எந்த உறவுமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை பொழிவதில்லை. உறவுகள் என்பது ஒரு பண்டம் மாற்றம் போன்றது தான். நாம் எவ்வளவு அன்பை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கோ அல்லது அதற்கு குறைவாகவோ தான் மற்றவர்கள் கொடுப்பார்கள். நாம் பத்து ரூபாயை கொடுத்துவிட்டு அதற்கு குறையான விலையுள்ள பொருளை கடைக்காரர் கொடுக்கும் பொழுது வாக்குவாதம், சண்டை என்று சச்சரவில் முடியும், அந்த சச்சரவு தீராத பொழுது பொருளே வேண்டாம் என்று எறிந்துவிட்டு வந்துவிடுவோம். அப்படித்தான் உறவுகளும், அவர்கள் எதிர்பார்க்கும் அன்பையும் உதவியையும் நாம் செய்யாத பொழுது அதன் தாக்கத்தை எதிர்மறை செய்கைகளாகவும் சில நேரங்களில் வாக்குவாதம் சண்டைமூலமாகவும், சில நேரங்களில் உங்களுடைய உறவே வேண்டாம் என்றும் நடந்து கொள்கிறார்கள்.

இப்பொழுது நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது, என்னவென்றால், நான் ஒருத்தருக்கு அளவுகடந்த அன்பை கொடுத்திருக்கிறேன், ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் என்னை தூற்றி இருக்கிறார்கள் என்று. அதாவது இந்த பண்டம் மாற்று வியாபாரத்தில், திருப்தி என்பது நாம் அடுத்தவருக்கு அவர்களுக்கு வேண்டியதை கொடுக்கிறோமா என்பதையும், அதே நேரம் நாம் நமக்கு வேண்டியதை பெறுகிறோமா என்பதையும் பொறுத்து இருக்கிறது. உதாரணமாக நாம் பதினைந்து ரூபாய் கொடுத்து தாகத்துக்கு தண்ணீர் கேட்கும் பொழுது, தண்ணீருக்குப்பதில் இந்தா அதைவிட விலையுயர்ந்த சாக்லேட் என்று வியாபாரி கொடுத்தால், நமக்கு அந்த நேரத்தில் ஆகா நமக்கு விலை உயர்ந்த பொருள் கிடைக்கிறதே என்று ஆனந்தம் ஏற்படாமல் எரிச்சல் தான் வரும். இன்னும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நிறம் மாறாத பூக்கள் என்றொரு படம், அதில் வரும் ஒரு நாயகனுக்கு தூண்டில் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்று ஆசை வரும். அப்பொழுது அங்கு மீன் பிடிக்கும் சிறுவர்களிடம் அவர் தூண்டில் கேட்பார். அவர்கள் எங்களுக்கு ஐம்பது பைசா குடுங்கள் என்பார்கள். அந்த நாயகனோ பெரிய பணக்காரர், அதனால், நூறு ரூபாய் நோட்டை குடுப்பார். அதற்கு அந்த சிறுவர்கள், எங்களுக்கு இது வேண்டாம், எங்களுக்கு ஐம்பது பைசா தான் வேண்டும் என்பார்கள், அதற்காக அந்த பணக்கார நாயகன் அருகில் யாரிடமாவது அந்த நூறு ரூபாயை கொடுத்து அதற்கு பதில் ஐம்பது பைசா வாங்கமுடியுமா என்று பார்ப்பார். ஆக, இங்கே அவர் அதிகமாக கொடுத்தும் அது அந்த சிறுவர்களுக்கு சந்தோஷத்தை தரவில்லை, அதற்கு மாறாக இருநூறில் ஒரு பங்கான ஐம்பது பைசா தான் அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. அது மாதிரி, நாம் அதிகமாக ஒருவருக்கு செய்தாலும் அது உண்மையில் அவர்களுக்கு அந்தளவுக்கு சந்தோஷம் தருகிறதா என்று பார்க்க வேண்டும். நாம் செய்வது அப்படி அவர்களுக்கு வேண்டாததாக இருக்கும் பட்சத்தில், நாம் எவ்வளவு அதிகமாக கொடுத்தாலும், அதனால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை.

அடுத்ததாக, சிலர் சொல்லலாம், பெற்றோர்கள் அன்பை இதில் சேர்க்க முடியாது என்று. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்று செய்யும் பொழுது அவர்களுக்கு அதில் தணிப்பட்ட ஒரு சந்தோஷம் இருக்கிறது. அந்த சந்தோஷத்துக்காகத்தான் செய்கிறார்கள். அதே போல் தான் சில நண்பர்களும் அவர்களுக்கு வேண்டிய நண்பர்களுக்கு அவர்களாக முன்வந்து உதவுவதில் ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. ஆக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவியோ அல்லது அன்போ செய்யக்கூடிய உறவு என்பது இல்லை.

இதை நாம் புரிந்து கொண்டால், மற்றவர்களிடத்தில் கலங்கமில்லாத, நிறைவான அன்பை எதிர்பார்க்க மாட்டோம். அப்படி எதிர்பார்க்காத பொழுது, நமக்கு எந்தவித ஏமாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏமாற்றம் இல்லாத பொழுது, எந்த மனவருத்தத்துக்கும் சாத்தியமில்லை.

Saturday, June 20, 2009

திருவடி

நம்மிடம் காலில் விழுந்து வணங்குவதும், ஆசீர்வாதம் வாங்குவதும் ஒரு வழக்க மாக இருந்துவருகிறது என்பது நமக்கு தெரியும். இதன் பின்னணி என்னவென்றால், நாம் விழுந்து வணங்கும் நபரின் கால் என்பது அவரின் உடலில் மதிப்பு குறைவான இடம், அதற்கே நான் தலை வணங்குகிறேன் என்றால் என் பணிவு அப்படிப்பட்டது. அல்லது என்னை அந்தளவுக்கு தாழ்த்திக்கொள்கிறேன் என்பது தான் அதன் அர்த்தம். ஆக நம்முடைய வழக்கம் என்னவென்றால், கால் என்பது நமது உடலின் கீழ்த்தரமான பகுதி என்பது தான். என் கால் தூசிக்கு சமமா? என் காலில் வந்து விழ வைக்கிறேன் என்பதெல்லாம் காலைப்பற்றி உயர்வாக பேசுவதாக நாம் நினைத்துவிடக்கூடாது. மோசமான என் காலுக்கு நீ ஈடாகுமா அல்லது என் உடலிலேயே மோசமான பகுதி கால் அதில் வந்து உன்னை சரண்புக வைக்கிறேன் என்பது தான் அர்த்தம்.

இதே தொனியில் தான் நாம் தெய்வகாரியமாக செய்யும் செயல்களை தெய்வத்தின் திருவடியில் சேர்க்கிறேன், அல்லது சமர்ப்பிக்கிறேன் என்று சொல்கிறோம். ஆக அங்கேயும் நாம் தெய்வத்தின் திருவடி தெய்வத்தின் மற்ற அங்கங்களில் இருந்து குறைவானது என்ற அர்த்தத்தில் தான் சொல்கிறோம்.

ஆனால், பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடலில் எது உயர்த்தது எது தாழ்ந்தது. உடலில் உறையும் ஆன்மா எல்லா இடத்திலும் நிரைந்திருக்கிறது. ஆகவே பேதத்தை நம் உடலிலுமா பார்க்க வேண்டும். நாம் நமது உடலை சமமாக பார்த்தால்தானே உலகில் உள்ள அனைத்தையும் சமமாக பார்க்க முடியும்.