Thursday, July 30, 2009

ஒரு புதிரின் விடை

பல நாட்களாக ஒரு புதிர் விடை தெரியாமல் இருந்தது.
சிலருடைய துன்பங்களுக்கு துயரங்களுக்கு வேதனைக்கு எனக்கு விடை தெரியாமல் இருந்தது.

பண்டைய காலத்தில் இதை சுலபமாக ஒருவருடைய பூர்வ ஜென்ம கர்மா என்று சுருங்கச் சொல்லி தப்பித்துவிட்டார்கள். ஆனால், இந்த கர்மா தியரியில் சில குறைபாடுகள் இருக்கிறது. அதைப்பற்றி இங்கு நாம் பார்க்கப் போவது இல்லை. ஆனால், அந்த கர்மா தியரி இதற்கு விளக்கம் கொடுப்பதற்கு போதியதாக இல்லை.

1.ஒரு முறை அடிமைகள் அந்த காலத்தில் நடத்தப்பட்டது பற்றி கேள்விப்பட்டேன். அதாவது ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களை செலுத்தியது அடிமைகள் என்று. கிட்டத்தட்ட 12 மணி நேரம், ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு துடுப்பை வளிக்க வேண்டும். பின் உணவு, பின் தூக்கம். இது தான் அவர்கள் வாழ்க்கை முறை. உடம்புக்கு நோய் என்றாலும் சாகும் வரை வேலை பார்க்க வேண்டும் என்ற கட்டாயம், எதற்காக இவர்கள் அப்படிப்பட்ட துன்பம் அனுபவிக்க வேண்டும். வேதனையை தவிர அவர்கள் வேறு எதையும் அனுபவிக்க வில்லை.

2.அதே போல் ஒரு நல்ல உள்ளம் படைத்த ஒரு வயதான அம்மையாரின் கதை, பிறந்ததில் இருந்து துன்பம் தான். ஆதரவு இல்லாத நிலையில், அதரவு கொடுத்தவர்களும், அரவணைக்க பிறந்தவர்களும் அடுத்து அடுத்து மரணம் என்று பிரிந்து போக, துன்பம் மட்டுமே அவருக்கு எஞ்சி இருந்தது இறுதிவரை.

3. அதே போல் அந்த காலத்தில் ஏற்ற தாழ்வுகளால், தாழ்த்தப்பட்டோர் அடைந்த அநியாயங்களும் துன்பங்களும், அடிமைத்தனமும் ஒரு தொடர்ச்சியானவைகளாக இருந்தது. அதாவது, அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதும் கிடைக்காமல் வாழ்க்கைப்பயணம் துயர் நிறைந்ததாகவே இருந்தது.

4.திருநங்கைகள், அரவாணிகள் என்றெல்லாம் euphemism ஆக சொன்னாலும், இல்லை பச்சையாக அலிகள் அல்லது ஒன்பது என்று சொன்னாலும் அவர்கள் படும் துன்பம் எல்லாம் ஒன்றுதான். ஆனால், அவர்கள் படும் துயரங்கள் நம்மாள் கற்பனை பண்ணியே பார்க்க முடியாதது. நம்மை யாராவது தெரியாத அறியாத நபர் கூட முகம் பார்த்து பேசாவிட்டாலே நமக்கு வருத்தமும் கோபமும் வருகிறது. அப்படி இருக்க சொந்த பந்தங்களால் கூட காரித்துப்பப்படும் இவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை யாராலும் துடைக்க முடியாது. எதற்காக இந்த முடிவில்லா தொடர் வேதனை.

இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை சக்கரம். அப்படி இருக்க வெறும் துன்பமும் துயரமும் மட்டுமே வாழ்க்கையாக இது மாதிரி சிலருக்கு மட்டுமே இருப்பதன் காரணம் புரியாமல் இருந்தது.

****

ஒரு 'செயல்' நடக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு சக்தி தேவை. உதாரணமாக ராக்கெட் புவியீர்ப்பு சக்தியை மீறி பல ஆயிரம் கிலோமீட்டர்கள் உயரே போக சக்தி வாய்ந்த எரிபொருள் தேவை, அதே போல் தான் நாம் அன்றாடம் உபயோகிக்கும் எல்லா உபகரணங்களும் எதாவது ஒரு எரிபொருள் அல்லது உந்துசக்தி தேவை. ஆக, பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டது என்றால், பல செயல்கள் ஸ்தம்பித்துவிடும். அதே போல், மனிதனின் எரிபொருள் அல்லது உந்து சக்தி வேதனை, அவமானம், அநியாயம். எந்த ஒரு காரியத்திற்கு பின்னாலும், அந்த காரியம் நல்லதாக இருந்தாலும் அல்லது கெட்டதாக இருந்தாலும், அதற்கு காரணமாக இருப்பது ஒரு வேதனையாகத்தான் இருக்கும். பல வேதனைகள் வெளியில் சொல்லப்படுவதில்லை. கூனியின் வேதனை ராமாயணமும் இலங்கையில் இருந்த அடிமைகளின் விடுதலையுமாக ஆனது. சகுனியின் வேதனை மகாபாரத யுத்தமாக ஆனது.

ஒவ்வொரு அநியாயமான காரணத்துக்குப்பின்னும் இன்னொரு அநியாயமான காரணம் இருக்கும்.

இன்று செய்திதாளில் ஒரு செய்தி, கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மகனை ஒரு தாய் கொன்று அந்த பிணத்துடன் இரண்டு நாள் தூங்கி பின் அதை கண்டம்துண்டமாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துச்சென்று ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் வீசியிருக்கிறார் என்று. படிப்பவருக்கு ஆத்திரத்தை தூண்டினாலும். அப்படி உணர்வுகள் மரத்துப்போயி இப்படி ஒரு குற்றம் செய்ய அவருக்கு நேர்ந்த அநியாயங்களும் துயரங்களும் காரணமாக இருக்கலாம். இதே போல் முன்பு மருத்துவகல்லூரியில் ஒரு மாணவனை இது மாதிரி கொன்று வெட்டி சூட்கேசில் வைத்து அனுப்பிய சகமாணவன், குற்றமற்றவன் என்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று பாதிரியாராக இருக்கிறாராம். அப்படி கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன், அவன் இறந்த பின்பு அந்த பெற்றோர் பல சமூக காரியங்களை செய்து வந்தார்கள்.

அதே போல் இன்று படித்த இன்னும் ஒரு செய்தி,

"ராக்கி சாவந்த்க்கு மீடியா வெளிச்சம் அவ்வளவு முக்கியம். காரணம், ராக்கியின் இளமை பிளஸ் வறுமைக் காலம். மும்பையின் கறார் அசிஸ்டென்ட் கமிஷனர் சாவந்த்துக்கு மகளாகப் பிறந்தவர் ராக்கி. நேர்மையானபோலீஸ் சாவந்த் வீட்டில் கடுகடு கெடுபிடியோடு நடந்துகொண்டார். கண் மைகூடப் போடாமல் அடங்கி ஒடுங்கி வளர்ந்தார் ராக்கி. ஒரு பக்கம் அமுக்கி அடக்கினால் வேறு திசையில் திமிறி எழுவது தானே இயற்பியல் இயல்பு. காபரே டான்ஸர், சினிமா நடிகை, செக்ஸ் சிம்பல் என்று ராக்கி திமிறி எழுந்து திசை திரும்பியது வரலாறு. பொறுக்க முடியாத போலீஸ் அப்பா வீட்டை விட்டு வெளியேறி, ஒரு கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸில் தனிமையாக வசித்து வருகிறார்"

ஆக, அந்த மருத்துவக்கல்லூரி கொலையில், அந்த கொலை செய்த மாணவனுக்கும் வேதனை அந்த பெற்றோருக்கும் வேதனை, அந்த இரண்டும் இரண்டு நல்ல காரியங்கள் நடக்க காரணமானது. அதே மாதிரி இந்த ராக்கி சாவந்த் மேட்டரில் தந்தையின் கெடுபிடியால் ஏற்பட்ட துன்பங்கள் அவரை பிரபலமாக்கியது. ஆக ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு துன்பம் நிச்சயமாக இருக்கிறது.

***

அதே போல், மேலே குறிப்பிட்ட நிரந்தர துன்பங்களுக்கு உள்ளானவர்களின் துயரம், ஏதோ ஒரு வழியில் பிற்காலத்தில் ஒரு நல்ல காரியத்துக்கு அஸ்திவாரங்களாக அமைகிறது. அந்த துன்பங்கள் எல்லாம் ஒரு யாகமாக, தவமாக நடக்கிறது. அவையாவும் ஒரு எரிபொருளின் சக்தி போன்றவை. அமுக்கி வைக்கப்பட்டதால் பிற்காலத்தில் நிலக்கரிகள் எப்படி சக்தியை தன்னுள்ளே கொண்டுள்ளனவோ, அதே மாதிரி சிலர் படும் தொடர் துயரங்கள் ஏதோ ஒரு வழியில் நற்செயல்களுக்கு எரிபொருளாகின்றன.

ஆக, நம்முடைய துன்பங்களைப்பற்றியும் பிறருடைய துன்பங்களைப்பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியதில்லை, அவை எல்லாம், ஒரு காரியத்துக்கு காரணிகளாகின்றன. ஒரு effectக்கு causeஆகின்றன.

Friday, July 3, 2009

சத்தியம்

இந்த blogஐ படித்த ஒரு நண்பர் எனக்கு எழுதியிருந்தார். நீங்கள் எழுதியிருப்பது தத்வார்த்தமாகவும் உண்மையாகவும் இருந்தாலும், அதை ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது என்று.

மிகச்சரியாக அவர் சொல்லி இருக்கிறார். சத்தியத்தை ஆரம்பத்தில் புரிந்து கொள்வது சிரமமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் கருப்பை வெளுப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது கருப்பல்ல அது வெள்ளை என்று சொல்வதை உடனே ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மாயையைத்தான் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த உண்மையையும் தாண்டி, அதற்கு ஆதாரமாக இருக்கும் சத்தியத்தை புரிந்து கொள்வது அதைவிட சிரமம். ஆகவே, இங்கு சத்தியத்தை புரிந்து கொள்ள மாயை, உண்மை, சத்தியம் என்றால் என்ன என்று பார்ப்போம்.


உண்மையும் சத்தியமும் ஒன்று என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். (தமிழில் சத்தியத்தை மெய் என்பார்கள், ஆனால், 'சத்' என்பதற்கு ஆன்மீகத்தில் உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆகவே, 'சத்' என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்பதால், மெய் என்பதற்கு பதில் சத்தியம் என்பதையே இங்கு பயன்படுத்தி இருக்கிறேன்.) உண்மை என்பதற்கும் சத்தியம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மை என்பது உள்ளதை உள்ளபடி உரைப்பது. சத்தியம் என்பது எந்த காலத்திலும் மாறுதல் இல்லாத ஒன்றை குறிப்பது. ஆடையை ஆடை என்பது உண்மை, அது பருத்தி அல்லது ரேயான் என்பது சத்தியம். அதாவது ஒரு ஜீன்ஸ் பேன்ட்டை ஜீன்ஸ் பேன்ட் என்று சொல்லுவது உண்மை. அந்த ஜீன்ஸ் பேன்ட்டை கிழித்தால், அது கந்தல் என்று ஆகிவிடும், அங்கே ஜீன்ஸ் பேண்ட் என்ற உண்மை இல்லாது போய்விட்டது. அந்த கந்தலை இன்னும் பிரித்தால், அது நூலாகிவிடும், அப்பொழுது அங்கு இருக்கும் உண்மைக்கு பெயர் நூல். ஆக உண்மை மாறுதலுக்கு உட்பட்டது. ஆனால், என்றும் மாறாது இருப்பது பருத்தியோ அல்லது ரேயானோதான். அதுவே, சத்தியம் எனப்படுகிறது.


அப்படிப்பட்ட உண்மையையும் கூட மாயை என்பது மறைத்துவிடும். அதாவது ஒரு திரைப்படத்துக்கு பேனர் எழுப்பி இருக்கிறார்கள் என்றால், அந்த பேனரில் நமது கதா நாயகி, நாயகர்கள் தான் தெரிவார்கள். அங்கு உண்மையாக இருக்கும் பேனர் துணி நம் கண்ணுக்கு தெரியாது். இந்த மாதிரி உண்மை மறைந்து அதற்கு பதில் வேறு ஒன்று தெரிவது தான் மாயை. (இங்கு மாயை என்பதை சுருக்கமாக பார்த்தோம், ஆனால், மாயையைப்பற்றி பிற்பாடு பல உதாரணங்களோடு பார்ப்போம்.)



இந்த மாதிரி இன்றைய அன்றாட வாழ்வில் நாம் உண்மை என்பது என்ன என்று தெரியாமல் மாயையே உண்மை என்று எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை நடத்திச்செல்வதால் தான் நாம் துன்பத்தில் உலன்று கொண்டு இருக்கிறோம்.

எப்பொழுது நமக்கு அந்த மாயை என்ற கருப்பு மறைந்து உண்மை என்ற வெள்ளை புரிய ஆரம்பிக்கிறதோ அப்பொழுதே நாம் மன அமைதியை அடைய ஆரம்பித்துவிடுகிறோம்.

எப்பொழுது அந்த உண்மையையும் கடந்து சத்தியத்தை நோக்கி நடை போடுகிறோமோ, அப்பொழுது நித்தியானந்தம் என்ற நிரந்தர ஆனந்தத்தை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
எப்பொழுது ஒரு பேனரை பார்க்கும் பொழுது மற்ற எதுவும் தெரியாமல் இது வெறும் பருத்தி என்று நம் கண்ணுக்கு தெரிகிறதோ அப்பொழுது நாம் மாயைக்கடந்து சத்தியத்தில் லயிக்கிறோம் என்று அர்த்தம். பேனர் என்பது ஒரு உதாரணம். அதே மாதிரி உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் ஆதாரமான, சத்தியமான, அந்த ஆன்மாவையோ அல்லது பரம்பொருளையோ நாம் பார்க்க ஆரம்பித்தால், என்றும் நமக்கு நித்திய ஆனந்தமே என்று ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். (இதைப்பற்றி பின்னால் விரிவாக பார்ப்போம்).

ஆன்மீகம் என்றால்... என்ற பதிவில் கூட உண்மையை அறிந்து கொள்வது என்று தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஆரம்பம் என்பதால் சத்தியத்தைப்பற்றி குறிப்பிடவில்லை. இன்னும் போகப்போக இந்த சத்தியத்தியத்தைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆக நாம் எவ்வளவு தூரம் சத்தியத்தை நெருங்குகிறோம் என்பதைப் பொருத்துத்தான் நமது நிம்மதியும் ஆனந்தமும் இருக்கிறது. சத்தியத்தை முழுமையாக அறிந்து சத்தியத்தில் ஒன்றிவிடுபவர்கள், முக்தியடைந்த பிரம்மஞானிகள் ஆவர். சத்தியத்தின் அருகில் சென்றவர்கள், சன்னியாசிகளாக பூரண அமைதியோடு இருக்கிறர்கள். அதனால் தான் காந்தி அவர்கள்கூட, தனது வாழ்க்கைப்பயணத்தை சத்தியத்தை நோக்கி பயணிக்கும் பரிசோதனை என்று பெயரிட்டிருந்தார்.


சத்தியத்தை புரிந்துகொள்வதும், ஒத்துக்கொள்வதும், கடைபிடிப்பதும் ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், ஆனந்தத்தின் சாவி சத்தியத்திடம் தான் இருக்கிறது என்பதால், எப்படியும் அதை புரிந்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்யவே, எண்ணிலடங்கா ஆன்மீக நூல்களை ரிஷிகளும் ஞானிகளும் நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளில் இருந்து எடுத்த கருத்துக்களைக் கொண்டு இந்த blogன் மூலம் நாம் மாயைகளை கடந்த உண்மைகளையும், அந்த உண்மைகளுக்கு ஆதாரமாக இருக்கும் சத்தியத்தையும் எப்படி புரிந்து கொள்வது என்று பார்ப்போம்.