Monday, March 15, 2010

வசீகரம்

காக்கையும் புறாவும் ஒரே மாதிரியான உடலமைப்பு கொண்டவையாக இருந்தாலும், புறா நம்மை வசீகரிப்பது போல், காக்கை நம்மை வசீகரிப்பதில்லை. இது காக்கையின் குற்றமும் அல்ல, புறாவின் பெருமையும் அல்ல. நம்முள்ளே இருக்கும் ஏதோவொன்று சில விஷயங்களை மட்டும் வசீகரத்தன்மை கொண்டதாக உணர்கிறது. எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் சில பாடல்கள் நம்மை சொக்கவைத்துவிடும். அந்த வசீகரத்தன்மை பாட்டில் இல்லை, அந்த வசீகரத்தை பகுத்தறிந்து உணரும் தன்மை நம்மிடம் தான் இருக்கிறது.

சிலருடைய எழுத்து நம்மை வசீகரிக்கும் – கல்கி, சுஜாதா போல

சிலருடைய பேச்சு நம்மை வசீகரிக்கும் – கலைஞர், ஹிட்லர், சில சாமியார்கள் போல

சிலருடைய நடனம் நம்மை வசீகரிக்கும் – மைக்கேல் ஜாக்சன் போல

சிலருடைய நடை உடை பாவனை நம்மை வசீகரிக்கும் – ரஜினி, ஜேம்ஸ்பாண்ட் போல

ஆனால், இது எல்லாம் இந்த கலைஞர்களின் அல்லது தலைவர்களின் திறமையால் அல்ல. அவர்களுடைய செயல்கள் நம்முள் ஒளிந்துள்ள வசீகரத்தை உணரும் தன்மையோடு ஒத்துப்போவதால் தான்.

சிலருடைய முக அமைப்போ அல்லது உடலோ நேர்த்தியாக எந்த குறையும் இல்லாமல் இருந்தும், நம்மை வசீகரிக்கமாட்டா. அதே போல் தான் மேலே சொன்னவர்களைவிட திறமையான நபர்கள் இருந்தால்கூட நமக்குள் உள்ள வசீகரத்தை உணரும் தன்மையோடு அவை ஒத்துப்போகவில்லை என்றால், அவைகள் நம்மை கவரமாட்டா.

ஆக, பூட்டுக்கு பொருத்தமான சாவி போல. நம்முடைய உணரும் தன்மைக்கு பொருத்தமானவையாக அந்த சாவிகள் இருந்தால் தான் அது வசீகரமாக ஆகும். ஆக பூட்டு இல்லை என்றால் சாவி இல்லை. ஆனால், நாம் சாவியை ஒரு பெருமைக்குரிய விஷயமாக, திறமையானதாக, சிறந்ததாக, உயரியதாக இருக்கிறது என்று அவைகளை தலையில் தூக்கி celebrity அல்லது பிரபலமானவர்கள் என்று கொண்டாடுகிறோம். ஆனால், அதன் பின்னனியில் இருப்பது நமது பூட்டுத்தான். புறாவிற்கு தெரியாது நாம் மனிதனின் கண்ணிற்கு காக்கையைவிட அழகாக தெரிகிறோம் என்று. அது தெரிந்தால் அதன் பெருமைக்கு எப்படி அது காரணம் இல்லியோ அது போல்தான் மற்றவர்களின் வசீகரத்தன்மையும் அதன் சார்ந்த பெருமையும்.

எங்கெல்லாம் நம் “வசீகரத்தை உணரும் தன்மை” இருக்கிறது என்று கண்டுபிடித்து அவைகளை காசாக்குவது தான் நமது மீடியாக்களின் வேலை.

அப்படி பேச்சில் வசீகரத்தை உண்டுபண்ணுக்கூடியவர்கள் அரசியலையும் ஆன்மீகத்தையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

Saturday, March 6, 2010

வலியும் பயமும்

வலிக்கு நமது வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு இருக்கிறது.

ஒரு நதியின் பாதையை நிர்ணயிக்கும் கரை போல் தான் நமது வாழ்க்கையின் போக்கை மாற்றியமைக்கக்கூடியவை இந்த வலிகள். உடலால் ஏற்படும் வலிகள், நமது செயல்களை வரையறுக்கின்றன. மன வலிகள் சமுதாயத்தில் நமது நடைமுறைகளை வரையறுக்கின்றன. வலியில் இருந்து பிறப்பது தான் பயம். இந்த பயம் தான் கரைகளை வழுவாக்குகின்றன. வலியை விட இந்த பயம் உறுதியானது. வலி சிறியதாக இருக்கலாம், ஆனால், அந்த வலியால் உண்டான பயம், அந்த வலியின் தன்மையை மிகைப்படுத்திக்கொள்ளும். அப்படி மிகைப்படுத்தி கற்பனை செய்துகொள்வதால், பயம் அந்த உண்மையான வலியை விட பன்மடங்கு பெரியதாக இருக்கிறது. அப்படி அதன் பரிமாணம் உண்மையைவிட அதிகமாக இருப்பதால், அந்த பயத்தின் உறுதித்தன்மை வலியின் உறுதித்தன்மையைவிட பன்மடங்கு அதிகமானது. அதனால் நமது கண்ணுக்கு பயம் பெரிதாக தெரிகிறது.

இந்த வலி உடலுக்கு ஏற்பட்டால் ஹிம்சை வலி. அது மனதுக்கு ஏற்பட்டால், சத்தியாகிர பதிவில் எழுதியிருந்த பிரகாரம் அவை அஹிம்சை வலியாகும். ஆக வலி வலிதான், முறை எப்படி இருந்தாலும்.

ஒருவன் காட்டுவழியில் செல்லும் பொழுது முள் குத்திவிட்டது என்றால், அந்த பகுதியில் அவன் மீண்டும் செல்லமாட்டான், அல்லது தவிர்க்கமுடியாமல் செல்ல நேரும் பொழுது மிகுந்த பயத்தோடு எச்சரிக்கையோடு செல்வான். ஆக, அந்த வலி பயத்தை உண்டுபண்ணி நமது செயல்பாட்டை வரையறுக்குறது. வெண்டைக்காய் சாம்பார் வைத்தால் கணவருக்கு பிடிக்காது அவர் திட்டுவார் என்ற பயத்தினால், அந்த மனைவி வெண்டைக்காய் சாம்பாரே வைக்க மாட்டார். நண்பர்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தால் மனைவி முகத்தை தூக்கி வைத்துக்கொள்வாள் என்ற பயத்தில் நண்பர்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவதை தவிப்பார் அந்த கணவர்.

இதே போல் தான், ஒரு நாட்டின் எழுதப்பட்ட சட்ட திட்டங்களும், சமுதாயத்தின் எழுதப்படாத சட்டதிட்டங்களும், நமது அன்றாட செயல்பாட்டை வரையறுக்கின்றன. அந்த சட்டதிட்டங்கள் தரும் வலியும் அவற்றால் உண்டான பயமுமே அதற்கு ஆதாரம். இந்த பயமே அனைத்து செயல்களுக்கும் உந்து சக்தி. வலி என்பது அக்னி, அந்த அக்னியில் இருந்து உதித்த ஜுவாலையே இந்த பயம், அதுவே அனைத்து செயல்களுக்கும் ஆதாரம்.

ஒரு வலி, பயம் மூலமாக தவிக்கப்படும்வரை, அந்த பயம் ஒரு வேலியாக ஒரு கரையாக, ஒரு எல்லையாக இருக்கும், எப்பொழுது அது தவிர்க்கபட முடியாமல் அனுபவிக்க வேண்டிய வலியாகும் நிலைவருமோ அப்பொழுது, அது வெடித்து சிதற ஆரம்பித்துவிடும். அப்பொழுது அது புரட்சியாகவோ, அல்லது வெறியாகவோ உருவாகி, நல்லது கெட்டது என்ற இரண்டையும் உண்டாக்க கூடிய வல்லமை படைத்ததாகிறது.

ஒரு நாட்டின் நிர்வாகம் செயல்பட பயம் வேண்டும், ஒரு நிறுவனத்தின் செயல்பாடு திறம்பட இருக்க பயம் வேண்டும். ஆக, எந்த ஒரு ஆளுமைக்கும் பயம் ஆதாரம். ஆக அன்றாட வாழ்வில், எல்லோரும் ஒருவரை ஒருவர் ஆளுமை செய்ய முயன்று கொண்டே இருக்கிறோம். அப்படி முயலும் பொழுது யார் அதிகமாக பயத்தை உருவாக்குகிறார்களோ அவர்களே ஆளுமை செய்யக்கூடியவர்களாக ஆகிறார்கள்.

இந்த பயத்தின் அளவும் வலியின் அளவும் அவர் அவர் வலிதாங்கும் திறனைப்பொருத்தது, ஒரு சின்ன ஊசியின் வலியை பெரியதாக கருதுபவர்களும் உண்டு, கடப்பாரை குத்தினாலும், தூக்கிப்போட்டுவிட்டு நடந்து செல்பவர்களும் உண்டு. இதுவே ஆளுமையை நிர்ணயிக்கும் அளவுகோல். ஆளுமை செய்பவர்கள், அதிக வலிதாங்குபவர்களாக இருப்பார்கள். குறைந்த வலிதாங்குபவர்கள், பயத்தில் ஆளுமைக்கு உட்படுவதே மேல் என்று, அடிமைபட்டு போய்விடுகிறார்கள்.

இதுவே ஆணாதிக்கத்தின் அஸ்திவாரம். ஆண்கள் உடல் மற்றும் உழைப்பில் பெண்களைவிட அதிக வல்லமையும், அதிக வலிதாங்கும் திறனுடனும் இருப்பதால், பெண்களுக்கு அதிக வலியை கொடுத்து அதன் மூலம் பயத்தை உண்டுபண்ணி அவர்களை ஆளுமை செய்து வந்துள்ளனர். அதே போல் மகனை ஆளுமை செய்யும் திறன் கொண்ட பெண்கள், மருமகளை ஆளுமை செய்யக்கூடியவர்களாக ஆயினர். கணவரை ஆளுமை செய்யும் திறன் கொண்ட பெண்கள், மாமி்யார்களை ஆளுமை செய்யக்கூடியவர்களாக ஆயினர்.

ஆக ஆளுமை செய்ய விரும்புவர்கள் அல்லது அடிமைப்பட விரும்பாதவர்கள், வலி தாங்குபவர்களாக அல்லது வலியை மற்றவர்களுக்கு கொடுப்பவர்களா இருக்கிறார்கள்.