Friday, July 3, 2009

சத்தியம்

இந்த blogஐ படித்த ஒரு நண்பர் எனக்கு எழுதியிருந்தார். நீங்கள் எழுதியிருப்பது தத்வார்த்தமாகவும் உண்மையாகவும் இருந்தாலும், அதை ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது என்று.

மிகச்சரியாக அவர் சொல்லி இருக்கிறார். சத்தியத்தை ஆரம்பத்தில் புரிந்து கொள்வது சிரமமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் கருப்பை வெளுப்பு என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது கருப்பல்ல அது வெள்ளை என்று சொல்வதை உடனே ஏற்றுக்கொள்ள முடியாது. நாம் மாயையைத்தான் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த உண்மையையும் தாண்டி, அதற்கு ஆதாரமாக இருக்கும் சத்தியத்தை புரிந்து கொள்வது அதைவிட சிரமம். ஆகவே, இங்கு சத்தியத்தை புரிந்து கொள்ள மாயை, உண்மை, சத்தியம் என்றால் என்ன என்று பார்ப்போம்.


உண்மையும் சத்தியமும் ஒன்று என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். (தமிழில் சத்தியத்தை மெய் என்பார்கள், ஆனால், 'சத்' என்பதற்கு ஆன்மீகத்தில் உயரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆகவே, 'சத்' என்பது மொழிகளுக்கு அப்பாற்பட்டது என்பதால், மெய் என்பதற்கு பதில் சத்தியம் என்பதையே இங்கு பயன்படுத்தி இருக்கிறேன்.) உண்மை என்பதற்கும் சத்தியம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மை என்பது உள்ளதை உள்ளபடி உரைப்பது. சத்தியம் என்பது எந்த காலத்திலும் மாறுதல் இல்லாத ஒன்றை குறிப்பது. ஆடையை ஆடை என்பது உண்மை, அது பருத்தி அல்லது ரேயான் என்பது சத்தியம். அதாவது ஒரு ஜீன்ஸ் பேன்ட்டை ஜீன்ஸ் பேன்ட் என்று சொல்லுவது உண்மை. அந்த ஜீன்ஸ் பேன்ட்டை கிழித்தால், அது கந்தல் என்று ஆகிவிடும், அங்கே ஜீன்ஸ் பேண்ட் என்ற உண்மை இல்லாது போய்விட்டது. அந்த கந்தலை இன்னும் பிரித்தால், அது நூலாகிவிடும், அப்பொழுது அங்கு இருக்கும் உண்மைக்கு பெயர் நூல். ஆக உண்மை மாறுதலுக்கு உட்பட்டது. ஆனால், என்றும் மாறாது இருப்பது பருத்தியோ அல்லது ரேயானோதான். அதுவே, சத்தியம் எனப்படுகிறது.


அப்படிப்பட்ட உண்மையையும் கூட மாயை என்பது மறைத்துவிடும். அதாவது ஒரு திரைப்படத்துக்கு பேனர் எழுப்பி இருக்கிறார்கள் என்றால், அந்த பேனரில் நமது கதா நாயகி, நாயகர்கள் தான் தெரிவார்கள். அங்கு உண்மையாக இருக்கும் பேனர் துணி நம் கண்ணுக்கு தெரியாது். இந்த மாதிரி உண்மை மறைந்து அதற்கு பதில் வேறு ஒன்று தெரிவது தான் மாயை. (இங்கு மாயை என்பதை சுருக்கமாக பார்த்தோம், ஆனால், மாயையைப்பற்றி பிற்பாடு பல உதாரணங்களோடு பார்ப்போம்.)



இந்த மாதிரி இன்றைய அன்றாட வாழ்வில் நாம் உண்மை என்பது என்ன என்று தெரியாமல் மாயையே உண்மை என்று எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை நடத்திச்செல்வதால் தான் நாம் துன்பத்தில் உலன்று கொண்டு இருக்கிறோம்.

எப்பொழுது நமக்கு அந்த மாயை என்ற கருப்பு மறைந்து உண்மை என்ற வெள்ளை புரிய ஆரம்பிக்கிறதோ அப்பொழுதே நாம் மன அமைதியை அடைய ஆரம்பித்துவிடுகிறோம்.

எப்பொழுது அந்த உண்மையையும் கடந்து சத்தியத்தை நோக்கி நடை போடுகிறோமோ, அப்பொழுது நித்தியானந்தம் என்ற நிரந்தர ஆனந்தத்தை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
எப்பொழுது ஒரு பேனரை பார்க்கும் பொழுது மற்ற எதுவும் தெரியாமல் இது வெறும் பருத்தி என்று நம் கண்ணுக்கு தெரிகிறதோ அப்பொழுது நாம் மாயைக்கடந்து சத்தியத்தில் லயிக்கிறோம் என்று அர்த்தம். பேனர் என்பது ஒரு உதாரணம். அதே மாதிரி உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் ஆதாரமான, சத்தியமான, அந்த ஆன்மாவையோ அல்லது பரம்பொருளையோ நாம் பார்க்க ஆரம்பித்தால், என்றும் நமக்கு நித்திய ஆனந்தமே என்று ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். (இதைப்பற்றி பின்னால் விரிவாக பார்ப்போம்).

ஆன்மீகம் என்றால்... என்ற பதிவில் கூட உண்மையை அறிந்து கொள்வது என்று தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஆரம்பம் என்பதால் சத்தியத்தைப்பற்றி குறிப்பிடவில்லை. இன்னும் போகப்போக இந்த சத்தியத்தியத்தைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆக நாம் எவ்வளவு தூரம் சத்தியத்தை நெருங்குகிறோம் என்பதைப் பொருத்துத்தான் நமது நிம்மதியும் ஆனந்தமும் இருக்கிறது. சத்தியத்தை முழுமையாக அறிந்து சத்தியத்தில் ஒன்றிவிடுபவர்கள், முக்தியடைந்த பிரம்மஞானிகள் ஆவர். சத்தியத்தின் அருகில் சென்றவர்கள், சன்னியாசிகளாக பூரண அமைதியோடு இருக்கிறர்கள். அதனால் தான் காந்தி அவர்கள்கூட, தனது வாழ்க்கைப்பயணத்தை சத்தியத்தை நோக்கி பயணிக்கும் பரிசோதனை என்று பெயரிட்டிருந்தார்.


சத்தியத்தை புரிந்துகொள்வதும், ஒத்துக்கொள்வதும், கடைபிடிப்பதும் ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், ஆனந்தத்தின் சாவி சத்தியத்திடம் தான் இருக்கிறது என்பதால், எப்படியும் அதை புரிந்து கொண்டு அதை நோக்கி பயணம் செய்யவே, எண்ணிலடங்கா ஆன்மீக நூல்களை ரிஷிகளும் ஞானிகளும் நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவைகளில் இருந்து எடுத்த கருத்துக்களைக் கொண்டு இந்த blogன் மூலம் நாம் மாயைகளை கடந்த உண்மைகளையும், அந்த உண்மைகளுக்கு ஆதாரமாக இருக்கும் சத்தியத்தையும் எப்படி புரிந்து கொள்வது என்று பார்ப்போம்.

No comments:

Post a Comment