Friday, February 19, 2010

நான், எனது, எனக்கு, என்னுடைய, என்னால்

முன்பு ஒருமுறை ஒரு குரூப் forum ல் ஒரு நண்பர் எழுதிய போஸ்ட்டுக்கு இன்னொரு நணபர் பின்வருமாறு கேள்விகள் கேட்டிருந்தார்.

"மனத்தூய்மையா இருக்க முடியுமா? மனத்தூய்மைன்னா புறம் பேசாம யார் மனதையும் துன்புறுத்தாம துரோகிக்காம ஏமாத்தாம பொய் சொல்லாம வன்முறை செயல்கள் செய்யாம கடும் சொல் சொல்லாம முடிந்தவரை தான தர்மம் செய்துக்கொண்டு இனிமையான சொற்களுடன் கருணை பொழியும் கண்களுடன் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாம அனைவரையும் அணைத்து செல்லும் பாங்கா?

இப்படி எல்லாம் இருக்க முடிவது சாத்தியமா? அது தான் முதலில் விஷமாக இருந்து முடிவில் அமிருதமாக உணரும் சாத்வீகமா?

ஆத்ம தரிசனம்னா என்ன? நேரா சாமிய கோவிலுக்கு போய் கும்பிடாம மனதில் இறைவனை நினைத்து அவன் நாமம் ஜபிப்பதா?" ...என்று கேட்டிருந்தார்.

அதற்கு நான் பின்வருமாறு பதில் கூறியிருந்தேன்.

"அந்த குறிப்பிட்ட சுலோகத்தின் அர்த்தம் "ஆத்ம தரிசனத்தால் உண்டாகும் மனத்தெளிவினால் ஏற்படும் சுகம் சாத்வீகமான சுகம், அதை அடைவது விஷம் சாப்பிடுவது போல் கடினமானது ஆனால் இறுதியில் அது அமிருதம் போல் இருக்கும்."

ஆத்ம தரிசனம் என்பது சாமியை கும்பிடுவதோ இறைவனை நினைப்பதோ அல்ல. நம் உடலில் இருப்பது இரண்டு, ஒன்று ஜட மயமான உடம்பு, இரண்டாவது ஆன்மா. ஆத்மாதான் நமக்கு உயிரையும் கொடுத்து, நமது உடல் இயங்கவும் காரணமாக இருக்கிறது. வெறும் உடல் பஞ்சபூதங்களால் ஆன பிணம். அது ஒரு வாகனம் மட்டுமே. இந்த ஆன்மா, உடல் என்ற இரண்டு மட்டுமே உண்மை. இந்த இரண்டுக்கும் நடுவில் "நான்" என்ற எண்ணம் மனத்தின் துணையோடு வந்து உட்காந்து கொள்கிறது. நாம் தூங்கும் பொழுது இந்த "நான்" இல்லை, நாம் மயக்கத்தில் இருக்கும் பொழுது இந்த "நான்" இல்லை. நாம் உயிரோடு இருக்கும் வரை நம்மோடு எந்த நேரமும் இருப்பது ஆன்மா ஒன்றே.

"நான்" என்ற எண்ணம் இந்த ஆன்மாவின் உண்மையை மறைத்துவிடுகிறது. நம்முடைய செயல், சிந்தனை, அறிவு என்ற எல்லாவற்றிற்கும் பின் புலமாக இருப்பது இந்த ஆன்மா ஒன்றே. ஆனால், இந்த இடையில் தோன்றிய "நான்" என்ற கற்பனையான எண்ணம், இது எல்லாவற்றிற்கும் உரிமை கொண்டாடுகிறது.

சிவாஜி கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்கிறார் என்றால், அப்படி நடிக்கும் நேரங்களில், அவர் கட்டபொம்மன் என்ற கதாபாத்திரமாகவே வலம் வருவார். அப்பொழுது சிவாஜி என்ற எண்ணம் இருக்காது. சிம்மாசானத்தில் உட்கார்ந்து கொண்டு "என் குலப்பெண்களுக்கு மஞ்சள் அறைத்துக்கொடுத்தாயா" என்று தான் கேட்பார், அப்பொழுது சிம்மாசானத்தில் இருந்து கொண்டு தாயாரிப்பாளரிடம் சம்பளம் பற்றி பேசமாட்டார். இங்கு உண்மையில் கட்டபொம்மன் இல்லை, ஆனாலும் சிவாஜி தன்னை கட்டபொம்மனாகவே நினைத்துக்கொள்வார். ஆனால், படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் சிவாஜியாக வலம் வருவார். இல்லியா? ஆனால், படப்பிடிப்பு முடிந்த பின்பும் தான் சிவாஜி என்பதை மறந்துவிட்டு கட்டபொம்மனாகவே வலம் வந்தால் எப்படி இருக்குமோ, அது மாதிரி நாம் எல்லோரும் சிவாஜி மாதிரியான ஆன்மாவை மறந்துவிட்டு, கட்டபொம்மன் மாதிரி இருக்கும் ஒரு கற்பனை பாத்திரமான "நான்" என்ற எண்ணத்தை கைக்கொண்டு இந்த உலகில் திரிந்து கொண்டு இருக்கிறோம்.

எப்பொழுது நான் கட்டபொம்மன் என்ற எண்ணத்தை கை விட்டவுடன், தான் சிவாஜி என்ற நிலைக்கு வருவாரோ, அதே மாதிரி எப்பொழுது நாம், "நான்" என்ற எண்ணத்தை கை விடுகிறோமோ, அப்பொழுது ஆன்மாவை மறைத்துக்கொண்டு இருக்கும் திரை விழகிவிடும். அப்பொழுது நமக்கு தெரிவது அந்த பரஞ்ஜோதியான ஆன்மா ஒன்றே. அந்த தரிசனமே ஆன்ம தரிசனம்.

நீங்கள் கேட்டிருந்த மனத்தெளிவு அல்லது மனத்தூய்மை என்றால், இந்த நான் என்ற எண்ணம் இல்லாதிருப்பதே. எல்லா கெட்ட நடத்தைக்கும் இந்த நான் என்ற எண்ணமே மூலம். நான், என்னுடையது, எனக்கு, என்னால் என்ற தன்னிலை இல்லாமால் நம்மால் பேசக்கூடமுடியாது. அப்படிப்பட்ட "நான்" என்ற ஒரு எண்ணம் இல்லாத நிலையில் ஏற்படும் ஆத்ம தரிசனத்தை அடையத்தான் எல்லா ஆன்மீக முறைகளும் பல வழிகளைப் போட்டுக்கொடுத்துள்ளன."

இப்படி நான் எழுதியதற்கு அந்த நண்பர் கீழ்வருமாறு பதில் எழுதியிருந்தார்.


"நான் எனது எனக்கு என்பதை உதாரணத்தோட விளக்கியதும் கேட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில்கள் கொடுத்ததும் மிகவும் மனதை நிதானமாக்கியது... படித்து தெளிந்தேன்..(எங்கயும் நான் எனக்குன்னு சொல்லாம எழுதிட்டேன்)".

இப்படி அவர் வேடிக்கையாக எழுதியிருந்தாலும், நமக்கு தெரியும் இந்த வாக்கியத்தில் என் மனதை, நான் படித்து தெளிந்தேன், நான் எழுதிவிட்டேன் என்று என், நான் என்பது மறைந்திருக்கிறது என்று.

"போ" என்று சொன்னால், அங்கே "உன்னை நான் உத்தரவிடுகிறேன் இங்கிருந்து நீ போய்விடு" என்பதில் "போ" தவிர மற்றவை எல்லாம் மறைந்திருக்கிறது இல்லியா. அதே போல் தான் நமது செயல், பேச்சு, எழுத்து, எண்ணம் எல்லாவற்றிலும் நான், எனது, என்ற அகங்காரம் நிறைந்திருக்கும்.

ஆக, இந்த அகங்கார வார்த்தைகள் இல்லாமல் நம்மால், பேச எழுத, சிந்திக்க, செயல்பட முடியாது.

நான் என்னதான் மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று செய்தாலும், நல்வழி படுத்துகிறேன் என்று எழுதினாலும், மனம் சாந்தியுற பேசுகிறேன் என்றாலும் அங்கு ஒவ்வொரு செயலிலும் அகங்காரம் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆக, எதுவும் செய்யாமல் இருப்பதே நான் மற்றவர்களுக்கு செய்யும் நல்ல காரியம்.

No comments:

Post a Comment